Thursday, February 21, 2008

ரெண்டு வேணும்

பொழுது சாயர நேரம்

என்னடா.. இது நம்ம பொழப்பு நாய் சீண்டாத பொழப்பா போச்சேன்னு வெசனப்பட்டுக்கிட்டு வக்காந்திருந்தப்ப பாத்து நம்ம ஆளு வந்தான் நண்பன் தான் ஆனா அறிவாளி.

'எதுவும் வேல வெட்டி இல்லைல்ல..'ன்னான்,

ஒன்னுமில்லைங்கறதுக்கு பதிலா பூம்..பூம் மாடாட்டும் தலைய ஆட்டினேன்.
புரிஞ்சிக்கிட்டான் சரியா..வெட்டிப்பயங்கறத.

'அப்ப கூட்டத்துக்கு போகலாமா..' ன்னான்.

நான் கேட்டேன்...'என்னா கூட்டம் யாரு வராங்க'

பொழப்பத்த பயலே.. என்ன கூட்டம்ன்னா வருவ..யாரு வராங்கன்னா வருவங்கறாமாதிரி ஒரு கேவலப்பார்வை ...

வெக்கமாப்போச்சி ஏண்டா இதக்கேட்டோம்ன்னு.. நெனச்சிக்கிட்டேன்.

சரின்னு கெலம்பினோம் நான் சும்மாத்தான் இருந்தேன் அவந்தான் ஆரம்பிச்சான் பேச்ச..

‘இப்ப ஏதாவது புத்தகம் படிச்சியா’ன்னான்.

என்னா பதில் சொல்றதுன்னு முழிச்சிட்டேன்.

நம்மளப்பத்தி தெரியாத ஆளா இருந்தா எதாவது ABCD யை முன்னப்பின்னப்போட்டு வெளிநாட்டு நாவலு அஷ்..புஸ் எதாவது பேர சொல்லி அவரு எழுதிக்கிழிச்சது ன்னு புருடா உடலாம்.
சரின்னு.. ‘சுப.வீ எழுதிய இந்த விதை முளைக்கும், கண்மணி எழுதிய அஞ்சலை’ன்னு உண்மைய சொன்னேன்
சிரிச்சிட்டான் .

அஷ்க்கு புஸ்க்குன்னு ஏதேதோ அவுத்து உட்டான் எனக்கு ஒன்னும் புரியல..இருந்தாலும் ஆகா ஓகோன்னு தலைய ஆட்டினேன்.

அதான நம்ப ஆளுவுளோட பழக்கம் புரியாத விசயத்த புடிச்சிக்கிட்டு புகழ்ந்து அழுவறதே வழக்கமாப்போச்சி நம்மக்கூட்டத்துக்கு.. ‘நமக்கு புரியாதது புனிதமானதா போச்சி’ என்பார் பேராசிரியர் ஒருவர்.

அந்தக்குட்டையில ஊர்ன மட்டத்தான நானும் வேற என்ன செய்ய..

பேசி முடிச்சிட்டு புரிஞ்சிச்சான்னு அவனும் கேக்கல புரியலன்னு நானும் சொல்லிக்கல..

அப்படியே நான் சொன்னாலும் உண்மையைதான சொன்னான்னு ஒத்துக்கவும் போறதில்லை.

அப்படி இப்படி புரியாதத பேசிக்கிட்டுப்போனாலும் சரியா கூட்டம் ஆரம்பிக்கற நேரத்துக்கு போய்சேந்துப்பாத்தா.. ஒருத்தரையும் காணம் அங்க.

அப்பதான் புரிஞ்சது இது தமிழ்ச் சங்க கூட்டமுன்னு.
சரின்னு அங்க இருந்த இருக்கையில வக்காந்திருந்தோம் .

கொஞ்ச நேரத்துல மொறப்படி தாமதமா கூட்டம் தொடங்குச்சி.

தலைவர் பேசினார்(கூட்டத்தோட தலைவர்) அப்பறம் ஒவ்வொருத்தரா பேசினாங்க.. எல்லாரும் ஏதேதோ பசனாங்க.

‘புத்தகவிமர்சன கூட்டம்ன்னு துண்டறிக்கைல இருக்கு எல்லாரும் என்ன என்னவோ பேசராங்க என்னடா இது கூட்டம்’ன்னு என்னை அழைத்துப்போனவன்கிட்ட கேட்டேன்.

அவனுக்கும் பதில் சொல்ல முடியல.

கூட்டம் ஏற்பாடு பண்ணியவர்கிட்ட அவன் கேட்டான். ‘
என்னங்க தப்பு தப்பா பேசராங்க பதில் சொல்ல யாரும் இல்லயா?’
காதுல வாங்கிக்கிட்டு போனவரு வழியிலேயே உட்டுட்டார் போல நிகழ்ச்சி ‘பழைய குருடி கதவ தொறடி’ன்னு நடந்துக்கிட்டு இருந்திச்சி.

நண்பன் கடுப்பாகி ‘என்னங்க நாங்க யாராவது பேசலாமா’ன்னான்.

‘இல்ல..உறுப்பினர்கள் தான் பேச முடியும்’ என்றார் கூட்ட ஏற்ப்பாட்டாளர்.
‘அப்பறம் எதுக்கு எல்லாத்தையும் கூப்பிட்டீங்க..’

மௌனமா இருந்தார்.(கை தட்ட நாலு பேர் வேணுமின்னு இருக்கலாம்.)

நண்பன் ‘இங்க நாலுவார்த்தை பேசரதுக்கு கொள்கை ஒன்னுமில்லாத ஒங்க அமைப்புல உறுப்பினராவனுமா..’(தமிழுக்காக ஒழைக்கிறோம்ன்னு சொல்றாங்கல்ல!)

விடாம திரும்பவும்.. ‘அவங்க எல்லாம் உறுப்பினர்களா?’ பேசிய ரெண்டு பேர காட்டி நான் கேட்க.

‘அவங்க.. கௌரவ அழைப்பாளர்கள்..’என்றார்.

‘அப்ப நாங்க கௌரவமில்லாம வெட்டியா வந்தவங்களா..?’ என்றான் நண்பன்.

பிரட்சினை முத்தவே.. எதுக்கு அமைதிப்பூங்காவா இருக்கற இந்த எடத்துல கலகம் பண்ணிக்கிட்டுன்னு, (நியாயத்துக்காக கலகம் பண்றவங்களுக்கு தீவிரவாதின்னு பேரு)

நானே சமாதானப்படுத்தி..நண்பனை கூப்பிட்டுக்கிட்டு வெளியே வந்தா..
அங்க பத்து பேரு நின்னுக்கிட்டு..பேசிக்கிட்டு இருந்தாங்க

சரின்னு கொஞ்ச நேரம் நின்னு என்னதான் பேசராங்கன்னு கேட்டா. இங்கதான் உண்மையான தமிழ் கூட்டமே நடக்குது.

இதுமாதிரிதான் உலகம் முழுக்க நடக்குது. மேடையில ஏறி பேசரவனவிட கடைசியாளா நின்னுக்கிட்டு இருக்கறவன் சிறப்பான சிந்தனையாளனா இருக்கிறான். இது எவனுக்கு புரியுது எவனாவது இத சொன்னாலும் அவன் அடாவடிக்காரன்.

ஆமா.. இப்பல்லாம் ‘பெரிய்ய்ய கூட்டத்துல பேசனுமுன்னா ரெண்டு வேணும். ஒண்ணாவது பிரபலம், ரெண்டாவது பணபலம்’.(கண்டிப்பா.. சுயசிந்தனை வேண்டாம், கூட்டம் நடத்தரவனுக்கு பிரட்சினை.)